Thursday, December 23, 2010

பூமியை விட 400 மடங்கு பெரிதான கிரகம் பால்வெளிக்கு அப்பால் கண்டுபிடிப்பு


               பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்றை முதல் முறையாக விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்முறையாக பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்மி ஸ்டிரீம் என்ற நட்சத்திர கூட்டத்தின் அருகே இந்த கிரகம் காணப்படுகிறது. பால்வெளி மண்டலத்தின் தென் பகுதியில் உள்ள இந்த நட்சத்திர கூட்டம் பார்னாக்ஸ் அல்லது பர்னேஸ் என்று அழைக்கப்படுகிறது. 600 கோடி முதல் 900 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த நட்சத்திர கூட்டம் பால்வெளி மண்டலத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

            பூமியில் இருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகம், எச்.ஐ.பி., 13044 பி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பி உள்ளன. வியாழன் கிரகத்தை விட 25 சதவீதமும், பூமியை விட 400 மடங்கும் எடை அதிகமானது. சிலி நாட்டில் லா சில்லாவில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்கள் 2.2 மீட்டர் குறுக்களவு உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், அதன் அருகில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. அந்த நட்சத்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் வாயு முற்றிலும் எரிந்து விட்டது. இதனால் அந்த நட்சத்திரம் விரிவடைந்து "சிவப்பு குள்ளன்' என்ற நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. அந்த நட்சத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள ஹீலியம் வாயு தற்போது எரிந்து வருகிறது.

           நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம், அதன் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு விழுங்கப்படும். இதனால் அந்த கிரகத்தின் ஆயுள் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஜெர்மன் நாட்டு ஹெடில்பெர்க் நகரில் உள்ள மேக்ஸ் - பிளாங் விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர் ரெய்னர் கெல்மன் கூறுகையில், "பால்வெளி மண்டத்திற்கு அப்பால் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த உற்சாகமூட்டக்கூடிய நிகழ்வாகும். மேலும், பல புதிய நிகழ்வுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இது ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

-நமது சிறப்பு நிருபர்-
Source: Dinamalar

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.