Sunday, July 18, 2010

மனிதவளத்தை பக்குவப்படுத்தா விட்டால் இந்தியா தனது முகவரியை இழந்து விடும் : கலாம்

          
         பொள்ளாச்சி : ""இந்தியாவில் மனித வளத்தை நாம் பதப்படுத்தி பக்குவப்படுத்தாவிட்டால், இந்தியா தனது முகவரியை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

         பொள்ளாச்சி புளியம்பட்டியில் உள்ள பி.ஏ., பொறியியல் கல்லூரி விழாவில் அப்துல்கலாம் பேசியதாவது:இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒன்பது சதவீதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. நாம் 10 சதவீதத்தை எட்டி, அதை 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், நாம் வளர்ந்த இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் காண முடியும்.இந்தியாவின் மொத்த உற்பத்தித்திறன் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டி விட்டது. நம் அன்னியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 300 பில்லியன் இலக்கை தாண்டியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் குவிக்கின்றன. இந்தியாவில் வேலைக்கேற்ற தகுதி வாய்ந்த திறமையான மனித வளம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தி, அதே நிலையில் மேம்படுத்தி கொண்டு செல்லக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு எண்ணெய் தூர் வாரும் தனியார் நிறுவனத்தின் பணிகளுக்கு இந்தியாவிலேயே அதற்குரிய மனிதவளம் கிடைக்கவில்லை என்பதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்தியாவில் மனித வளத்தை நாம் பதப்படுத்தி பக்குவப்படுத்தாவிட்டால், இந்தியா தனது முகவரியை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.இந்தியாவினுடைய வேலைவாய்ப்பு திறன் கொண்ட மொத்த மனித வளம் 45 கோடி. அதில் வரன்முறை படுத்தப்பட்ட மனிதவளம் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதம் வரன்முறைபடுத்தப்படாத துறைகளிலிருந்து வருகிறது. இதில், விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள், வீட்டு வேலையாட்கள் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் என்று வளர வேண்டும் என்றால், விவசாயம் ஆண்டுக்கு நான்கு சதவீத வளர்ச்சியையும், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம்.

          விவசாயத் துறையில் குறைந்த வருவாயில் ஈடுபட்டுள்ள மனித வளம், மற்ற துறைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் அவர்களுக்கு தேவையான பயிற்சியும், தேவையான திறமையும் இல்லையென்றால், அவர்களால் எந்தத் துறையிலும் நுழைய முடியாது. இங்கு தான் சவால் ஆரம்பிக்கிறது.இதை சரி செய்வதற்கு அரசு, தனியார் துறைகள், தொழில் துறை, கல்வித்துறை, பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அப்துல்கலாம் பேசினார்.
Source: Dinamalar

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.