Saturday, July 24, 2010

"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக்

   
               புதுடில்லி : "புவி ஈர்ப்பு விசை என்பது வெறும் மாயையே' என, விஞ்ஞான உலகத்தில் "பற்ற' வைத்திருக்கிறார் எரிக் வெர்லிண்டே என்ற விஞ்ஞானி.இயற்பியலின் அடிப்படை விதியான புவி ஈர்ப்பு விசை என்பது குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும், எரிக் வெர்லிண்டே என்ற விஞ்ஞானி, சமீபத்தில், ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். "ஆன் தி ஆரிஜின் ஆப் கிராவிட்டி அண்டு தி லாஸ் ஆப் நியூட்டன்' என்ற அந்த அறிக்கையில், புவி ஈர்ப்பு விசை பற்றி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

         எரிக் மட்டுமல்லாமல் பல்வேறு விஞ்ஞானிகளும் இந்த சந்தேகத்தை எழுப்பி விடை தேடி வருகின்றனர். வெப்பம் மற்றும் காற்றின் செயல்பாடுகளையும், தன்மையையும் ஆராயும், "தெர்மோடைனமிக்ஸ்' துறையில் புவி ஈர்ப்பு விசை பற்றிய நியூட்டனின் விதிகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இதுபற்றி சந்தேகப்படும் விஞ்ஞானிகள், "இதுவரை நவீன அறிவியல் புவி ஈர்ப்பு விசையை தவறான கோணத்தில் தான் பார்த்து வந்திருக்கிறது. புவி ஈர்ப்பு விசைக்கும் ஆதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறது. பிரபஞ்ச விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்து வரும் "கரும் சக்தி' (டார்க் எனர்ஜி) பற்றி, கேலக்சிக்களை ஈர்த்து வைத்திருக்கும் "கரும்பொருள்' (டார்க் மேட்டர்) பற்றி மேலும் அறிய புவி ஈர்ப்பு விசையைப் புதிய கோணத்தில் நோக்க வேண்டும்' என்று கூறுகின்றனர்.

       எரிக் இதுபற்றி கூறுகையில், "உங்கள் தலைமுடி, ஈரத்திலோ வெப்பத்திலோ சுருண்டு விடுகிறது. தலைமுடியை சுருள வைக்க இயற்கை அந்த இரண்டைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தலைமுடியை மீண்டும் நேராக்கிக் கொள்ள, வேறொரு சக்தி தேவைப்படுகிறது. அது தானாக, அதாவது இயற்கையாகவே நேராகி விடுவதில்லை. அதுபோல, புவியீர்ப்பு விசை என்பது தானாக உருவானது அல்ல. அது, வேறொரு சக்தியால் உருவாக்கப்படுகிறது. அந்த ஈர்ப்பு விசை பிரபஞ்சத்தில் ஒரு ஒழுங்குமுறையை நிலைநாட்டப் பயன்படுத்தப்படுகிறது' என்று கூறுகிறார். "அவர் கூறுவது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் நாம் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரிகிறது' என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள் சிலர்.
Source: Dinamalar

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.