Monday, July 12, 2010

நதிகள் இணைப்பில் தடை எங்கே: கலாம் பேச்சு


         சென்னை :""நதிகள் இணைப்பு முயற்சியில் தொலைநோக்குப் பார்வை உள்ள சமூகம் இல்லாதது தடையாக இருக்கிறது, ஆனால் தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது,'' என, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

         பாரதிய வித்யா பவன் மற்றும் வானவில் பண்பாட்டு மையம் சார்பில், குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில், முனைவர் வா.செ.குழந்தை சாமி எழுதிய கவிதை படைப்புகள் குறித்த, கருத்தரங்க துவக்க விழா, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகவன் வரவேற்றார்.குலோத்துங்கன் கவிதைகளை, சமுதாயம், கவிதைப் பண்புகள், அறிவியல் மற்றும் கல்வியியல் பார்வை களில் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் 30 பேர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை, "மானுடம் போற்றுதல்' எனும் தலைப்பில், திரிசக்தி பதிப்பகம் நூலாக தயாரித்துள்ளது. அந்நூலை அப்துல்கலாம் வெளியிட, திரிசக்தி சுந்தர்ராமன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்களுக்கு சான்றிதழ்களையும் அப்துல்கலாம் வழங்கினார்.

             விழாவில், அப்துல்கலாம் பேசியதாவது:முனைவர் வா.செ.குழந்தைசாமி கல்வி வித்தகர், அறிவியல் அறிஞர், நீர்வள மேலாண்மை நிபுணர், சமதர்ம சிந்தனையாளர், கவிஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்கிறார்.தேசிய அளவில் நதிகளை இணைப்பதற்கு தேவையான நிதி, தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. தொலைநோக்கு பார்வையில்லாத சமூகமும், அரசியலும் தான் இதற்கு தடையாக உள்ளன.மதம், இனம், மொழியின் பெயரில் எங்கு சிறுபான்மை எண்ணம் நிலவுகிறதோ, எங்கு கருத்து வேறுபாடுகள் வரவேற்கப்படுகிறதோ அந்த இடங்களில் தான் தமக்கு பணி.நாகரிகம் என்பது உடையில் இல்லை; சிந்திக்கும் திறனில் உள்ளது. மொழி தான் ஒரு இனத்தின் பிரதான அடையாளம். ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அழிவதாக அர்த்தம்.

            வா.செ.குழந்தைசாமியின் கவிதைகளில் காணப்படும் இதுபோன்ற கருத்துக்கள் வரவேற்கத் தக்கவை. இவர் கவிதைகளை படிக்கும்போது, பாரதியார் என் நினைவுக்கு வருகிறார்.இவருடைய கவிதைகளில் பொதிந்துள்ள உயரிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆற்றல் நம் இளைஞர்களிடம் தான் உள்ளது.இந்தியாவில் உள்ள 54 கோடி இளைஞர்களுக்கு, "உங்களால் முடியும்' என்ற நம்பிக்கையை மட்டும் நாம் தர வேண்டும். குலோத்துங்கனின் கவிதைகள் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும்.இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

            நிகழ்ச்சியில், முனைவர் வா.செ. குழந்தைசாமி, தமது கவிதைகளில் சிலவற்றை வாசித்தார்."மானுடம் வென்ற தன்றே' என்ற தலைப்பில், சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லுப் பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ண மூர்த்தி நன்றி உரையாற்றினார்.ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் உலகநாயகி பழனி,ஸ்ரீகிருஷ்ணாசுவீட்ஸ் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source: Dinamalar






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.