Thursday, June 24, 2010

நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன?


           இந்தியாவில்உள்ள ஐம்பது சதவீத வீடுகளுக்குத் தேவையான அளவு தண்ணீர் இருப்பு கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். கடலில் ஆண்டு தோறும் கலந்து வீணாகும் 1500 பிசிஎம் வெள்ள நீரை தண்ணீர் இல்லாத வறட்சிப் பகுதிகளுக் குத் திருப்பி விடுவதுதான் நதிநீர் இணைப்பின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

         உன்னதக் கனவான நதிகளை இணைப்பதில் என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும்? முதலாவது, அதனால் பாதிக்கப்படக் கூடிய மக்களின் மறுவாழ்வு. நதிகளை இணைப்பதற்காக வெட்டப்படக் கூடிய பெரிய வாய்க்கால்களால் அங்கு வாழும் மக்கள் தகுந்த நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு வேறு இடங்களுக்கு வாழ்வாதார வசதிகளோடு மறு குடியமர்ப்பு செய்யப்பட வேண்டும். அந்த இடப்பெயர்வும் அவர்கள் முன்பு வாழ்ந்த இடத்தில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கக் கூடாது. இவர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை கனிவுடன் கவனித்து நிவர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாக இருக்கும். ஏனென்றால் ஆண்டு தோறும் வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்படும் 340 மில்லியன் மக்களின் விடிவுகாலமாக இருக்கப் போவது இவர்கள்தான். அவர்களின் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து தகுந்த தீர்வினை அளிக்க வேண்டியது முதல் கடமை. இதில் எந்த “காம்ப்ரமைஸு’க்கும் இடம் இல்லை.

            அடுத்து வரும் பிரச்னையும் மிக முக்கியமானது. இயற்கையின் நீரோட்டத்தில் உள்ள நதிகளின் நீரைத் திருப்பி விட்டால் அது சுற்றுச்சூழல் சமன்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மேலும் பல புதிய அழிவுகளை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்களே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அவர்கள் சொல்வதை முற்றிலும் ஒதுக்கி விடுதல் நல்லதல்ல. எந்த ஒரு காரியத்துக்கும் எதிர்வினைகள் இருக்கும். அதே போல் நதிநீர் இணைப்பிலும் இயற்கைக்கு மாறான சில எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இயற்கையுடன் போராடி வரும் மனிதன், இப்போது அதைத் திறமையாகக் கையாளும் திறன்களை வளர்த்து வைத்திருக்கிறான். அந்த அனுபவ அறிவை இந்த விஷயத்தில் பயன்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலுக்கு எந்தக் கேடும் வராத அளவில் இந்தத் திட்டம் நிறைவேற்றப் படுவதற்கான சாத்தியங்கள் நூறு சதவீதம் உண்டு.

             உதாரணத்துக்கு நதிநீர் இணைப்புக்கான காட்டுப் பிரதேசங்களை இப்போதுள்ள அளவில் பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை வெட்டினால் பிரச்னை வராது என்கிறார்கள் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள். இதைப்போல் ஒவ்வொரு விஷயத்தையும், அதன் சுற்றுச்சூழல் பாதிப்பை மனதில் கொண்டு செயல்படுத்த வேண்டும். இதற்கு சூயஸ் கால்வாய் ஒரு உதாரணம். இயற்கையை மீறி கண்டங்களை இணைக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாய்தான் அது. நிலத்தின் அளவை விடச் சற்று உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட கால்வாய். நீரேற்று சக்தியின் மூலம் கப்பல்களை கால்வாயின் மீது ஏற்றி கடலுக் குள் தள்ளிவிடும் இஞ்சினியரிங் சாதனை. அதனால் ஆப்பிரிக்கா கண்டத்தையே சுற்றி சுற்றி வந்த கப்பல்கள் இன்று எளிதில் மத்திய அமெரிக்கா வழியே உலகைச் சுற்றுகின்றன.

            அடுத்து வரக்கூடிய முக்கியமான விஷயம், நதிகளின் ஓட்டத்தைக் கண்டு பிடித்து, "வாட்டர் ரிசோர்ஸ்' எனப்படும் தண்ணீர் இருப்பைக் கணக் கெடுத்து, அதை எங்கே. எந்த திசை நோக்கி, எப்படித் திருப்பி விடலாம் என்கிற பிருமாண்டமான காரியம்.

            இந்தியா விண்ணில் அனுப்பி வைத் திருக்கும் ரிமோட் சென்ஸிங் சாட்டிலைட்டுகள் இதற்கு அளப்பரிய உதவிகளைச் செய்யும். “"ஏரியல் இமேஜஸ்'’’ என்று சொல்லப்படும் விண்ணிலிருந்து தெரியக் கூடிய நிலப் பரிமாணங்கள் நதிநீர் இணைப்புப் பாதை களைத் துல்லியமாக நமக்கு எடுத்துத்தரும். இவற்றை அருமையாக ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு பெரிய இளைஞர் விஞ்ஞானப் படையே நம்மிடம் இருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒன்று.

            மதுரையைச் சேர்ந்த திரு. ஏ.சி. காமராஜ் மற்றும் அவரின் அணி யினரையும், மற்றும் பல்வேறு நதிநீர் இணைப்பு நிபுணர்களையும் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து நதி நீர் இணைப்பு பற்றி கலந்துரை யாடியுள்ளேன். குறிப்பாக திரு. ஏ.சி. காமராஜ் அவர்கள், நதிநீர் இணைப்பு கமிட்டியில் உறுப்பினராகவும் உள்ளார். நதிநீர் இணைப்பு பற்றிய திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற அணி இது. இவரது "நீர்வழிச்சாலை' என்னும் திட்டம், வழக்கமான நதிநீர் இணைப்பு திட்டத்தை விட மாற்று திட்டமாகும். இந்த திட்டத்தை மாநிலங்கள், ஆராய்ந்து அறிந்து, செயல் படுத்தினால், நதி நீர் இணைப்பின் பலன் மட்டுமல்ல, ஓவ்வொரு மாநிலமும், தண்ணீர் சேமிக்கும் வழியாக இந்த நீர்வழிச் சாலைகளை பயன்படுத்துவது மட்டுமல்ல, அளவுக்கு அதிகமாக மழை பெய்து அணையின் கொள்ளளவை மிஞ்சி கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை மாற்று வழியில் திருப்பி, தண்ணீர் தேவைப்படும் பகுதிகளுக்கு இந்த நீர்வழிச்சாலைகள் மூலமாக அனுப்பலாம். இந்த திட்டம், ஓவ்வொரு மாநிலங்களுக்கும் இன்றியமையாதது. இது நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு ஓரு இணைப்பு திட்டமாக செயல்படும்.

             தமிழ்நாட்டில் பெரும் மழை பெய்து, வெள்ளத்தினால் மாநிலம் பாதிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் அவரை அழைத்து இது பற்றிப் பேசி, தமிழ் நாட்டிற்கு நீர் மேலாண்மை மற்றும் நீர் வழிச் சாலைக்கு ஓரு திட்டத்தை தீட்ட வேண்டும் என்று கூறியது என் நினைவுக்கு வருகிறது.

            “பிரஸி டெண்ட் செக்ர டேரியட்டில் என்னு டைய இயக்குனராகப் பணிபுரிந்த திரு. வி. பொன்ராஜ் அவர்களை இந்த குழு வினருடன் பணிபுரியுமாறு நான் அழைத் திருந்தேன். சந்திப்பில் பல நீண்ட விவாதங்கள் நடந்தன.

            அதன் விளைவாக திரு பொன் ராஜ் அவர்கள் திரு. ஏ. சி. காமராஜ் அவர் களுடன் இணைந்து “தமிழ்நாட்டின் நீர் வழிச்சாலை - பஹம்ண்ப்ய்ஹக்ன் ரஹற்ங்ழ் ஜ்ஹஹ்ள்’’என்கிற தலைப்பில் ஒரு பிராஜக்ட் ரிப்போர்ட்டை எனக்குத் தயாரித்துக் கொடுத்தார். அது ஒரு மிக முக்கியமான ஆராய்ச்சி வடிவம். “நதிநீர் இணைப்பின் - நீர் வழிச்சாலை யின்’ஒரு முன்னுரையாகக் கூட அதைச் சொல்லலாம்.

            இந்த திட்டத்தை நான் அப்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவிடம், சென்னையில் பலத்த மழையின் மத்தியில், 28 நவம்பர் 2005 அன்று ராஜ்பவனில் சமர்ப்பித்து விவாதித் தோம், இந்த பிரச்சினையின் ஆழத்தை அவர் அறிந்திருந்தார், அவரது ஆழ்ந்த கருத்தும் அதைப்பற்றிய அனுபவமும், அதை கையாண்ட விதமும், அவரது தொலைநோக்கு பார்வையை உணர்த்தியது. அதை செயல்படுத்துவேன் என்று உறுதியுடன் இருந்தார். பிறகு முதலமைச்சாராக ஆகி என்னை ராஷ்டிரபதி பவனில் சந்தித்த கலைஞர் கருணாநிதி அவர் களிடமும் இந்த திட்டத்தை பற்றி எடுத்துச்சொல்லி விவாதித் தேன். திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு நதி களை இணைப்பது எனது நீண்ட நாள் கனவு, எனவே அதை கண்டிப்பாக எனது அரசு செய் யும் என்று என்னிடம் கூறி னார்.

          செய்ய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். தலைவர்களுக்கு அதை செய்யக் கூடிய வல்லமையையும், ஆற்ற லையும், தடை பல கடந்து, எங்களால் முடியும் என்று செயலில் காட்டும் திறனையும் ஆண்டவன் அவர்களுக்கு அருள்வாராக.
- டாக்டர் அப்துல் கலாம்
Source: nakkheeran

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.