Wednesday, June 9, 2010

நாம் மகானாக முடியுமா ?


 மகான் என்பதன் பொருள் என்ன ? மகா + ஆன் = மகான்.

         உயர்ந்த ஆன்மா. அறிவில் தெளிந்த ஆன்மா. அன்பும், கருணையும், ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறிகளை கடைபிடிக்கும் ஆன்மா. இவ்வாறு “மகான்” என்பதற்கு பலவிதமான விளக்கங்கள் கூறலாம். இப்படி வாழ்ந்தவர்கள் ஆதிகாலத்திலிருந்தே பலபேர் உள்ளனர். புத்தர், மகாத்மா காந்தி, மதர் தெரஸா போன்றோர் உயர்ந்த ஆன்மாக்கள். தன்னுடைய வாழ்க்கையையே ஒரு பாடமாக மற்றவர்கள் கடைபிடிக்கும்படி வாழ்ந்து காட்டியவர்கள். இவ்வரிசையில் மகானாக வருவபர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        இத்தகைய மகான்களிடம் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் பிறர் என்ன செய்தால் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ முடியும் என்று சொல்கிறார்களோ அவ்வாறே அவர்களும் வாழ்ந்து காட்டியுள்ளனர். ஆனால் நம் சமுதாயத்தில் உள்ள மக்கள் அத்தகைய மகான்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் அருமை, பெருமையை புரிந்து கொள்வதில்லை. அதோடு அவர்களை போற்றி புகழ்வதோடு நிறுத்திக் கொள்வர். அவர்கள் வாழ்வது போல் நம்மால் முடியாது. அவர்கள் தனிப்பிறவிகள், மகான்கள் என்று காரணங்களை மேற்காட்டி தன் இயலாமையை மறைத்து, அவர்கள் போல் வாழ்வதற்கு முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால் வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள், தான் சொல்வதை செய்வதால் மனிதருள் மாணிக்கமாக திகழ்கிறார்கள். அவருடைய கவியில் மனிதருள் உயர்ந்தோர் யார் என்று குறிப்பிடுகின்றார்.

”மனிதனென்ற உருவினிலே மக்களுண்டு

மனமறிந்த தேவருண்டு மதிநிலைத்த மனிதருண்டு

மனமறிந்து மனஇதமாய் மாக்களுக்கும் மக்களுக்கும்

மனமுவந்து தொண்டாற்றும் மாமுனிவர் முழுமனிதன்.”


          வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒவ்வொரு மனிதனும் இன்புற்று வாழ, உடல் நலம், மனவளம், நட்பு நலம் காக்க பிறவியின் பயனான முழுமைப் பேறு அடைய வழிமுறைகளைக் கொடுத்துச் சென்றுள்ளார். எள்ளளவும் சந்தேகமில்லாமல் அவர் சொன்ன வழிகளைக் கடைபிடித்து வாழ்ந்தால், குருவின் வழிகாட்டலின் மூலம், நாமும் மகானாக முடியும்.

           நமக்கு அவர்கள் அளவிற்கு மன உறுதி இல்லாததால்தான் பயிற்சி முறைகள் தேவையாக உள்ளன. பயிற்சிகள் செய்யும் போது உடனே பலனளிக்கமால் போனால் மனம் தளர்ந்து விடுகிறோம். “முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழியெல்லாம் மற்றவர்களுக்கு தான் !!! நமக்கு என்று வரும்போது மாற்றம் தெரியவில்லையெனில் வேறு முறைகளை கையாள ஆரம்பிக்கிறோம். பலவிதமான சந்தேகங்கள் (சந்து + ஏகம் ) வருகின்றன. வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்ந்த காலத்தில், நம்மில் பலர் அவர் வாழும் விதம் கண்டிருக்கிறோம். எனவே மனம் தளராமல் பயிற்சிகளைக் கடைபிடித்து நாமும் உதாரண ஆன்மாக்களாக இருந்து அவர் வகுத்த பயிற்சி முறைக்ளை மற்றவரும் பெறுவதற்கு தொண்டு செய்வோம், வளம் பெறுவோம். வாழ்க வளமுடன்.
-மூத்த பேராசிரியை. ஜெயந்தி பாலசந்திரன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.