Monday, March 29, 2010

மனவளக்கலை 'யோகா' வில் குற்றச்செயலை தடுக்க முடியும் : அறிவுத்திருக்கோவில் விழாவில் வலியுறுத்தல்

     
         பொள்ளாச்சி : 'மனவளக்கலை யோகா மூலமாக வன்முறை, குற்றம் போன்ற சம்பவங்களை வெகுவாக தவிர்க்க முடியும்' என்று ஆழியாறு அறிவுத்திருக்கோவில் விழாவில் வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நடந்த நான்காவது வேதாத்திரி வேள்வி தின விழாவில், உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் மயிலானந்தன் வரவேற்றார். அறிவுத்திருக்கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

        சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரும், மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைமை இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது: மனிதகுலம் முழுமையான நலவாழ்வு பெறுவதில் மனவளக்கலை யோகா முக்கியப்பங்கு வகிக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் தத்துவத்தை அரசு உட்பட பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சமுதாயத்தில் மொழி, இனம் வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் மனவளக்கலையை படிக்கின்றனர். பள்ளிகளில் மாணவர்களுக்கு மனவளக்கலையை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகும்.

      மனவளக்கலை மூலமாக மனதிற்கு அமைதி கிடைக்கும்போது, குடும்பம், சமுதாயம் அனைத்தும் மேன்மையடைகிறது. முன்பு போர் ஏற்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமே பலியாயினர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் போர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் ஒரேநொடியில் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளது. தனிமனித அமைதி மூலமே உலக அமைதியை உருவாக்க முடியும் என்பது வேதாத்திரியின் வாக்கு. எனவே, சமுதாயம், குடும்பம் உட்பட அனைத்து தரப்பிலும் அமைதி வேண்டும். தனி மனிதனிடம் அமைதி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். மனவளக்கலை யோகா மூலமாக வன்முறை, குற்றம் போன்ற சம்பவங்களை வெகுவாக தவிர்க்க முடியும். இவ்வாறு, கார்த்திகேயன் பேசினார்.

        'சிறப்புணர்ந்த பெண்மதிப்பு' என்ற தலைப்பில் பேச்சாளர் பாரதி மற்றும் 'சீர்செய்த பண்பாடு' என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா பேசினர். நிறைவாக, அறிவுத்திருக்கோவில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி பேசினார்
Source: Dinamalar

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.