
இந்நிகழ்ச்சியில் மேயர் பேசுகையில், உலக மக்கள் அனைவரும் உடல்நலனை பேணும் வகையில் பாதுகாக்கும் சிறந்த பயிற்சியாக யோகா பயிற்சி விளங்கி வருகிறது. 2004ம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஏற்பட்ட ஒரு பெரிய விபத்தில் எனக்கு கால்கள் 6 துண்டாகவும் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. அதன் பின்னர் நான் தீவிரமாக யோகா பயிற்சி மேற்கொண்டதினால் 9 மாதங்கள் கழித்து கால்களை மடக்கி உட்காரும் நிலை ஏற்பட்டது.
தமிழக முதல்வர் நாள்தோறும் யோகா பயிற்சி மேற்கொள்வதினால் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். சென்னை மாநகராட்சி சார்பில் முதல் முறையாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 5 ஆயிரம் மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுத் தரும் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்கள் கோவை ஆழியார் பகுதிக்கு சென்று யோகா பயிற்சி பெற்று வந்தனர்.
அந்த ஆசிரியர்கள் மூலம் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் மாநகராட்சி வாகன ஓட்டுநர்களால் சில விபத்துக்கள் நேரிட்டது. அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக 1500 ஓட்டு நர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டு இதுவரையில் எந்தவித விபத்துமின்றி ஓட்டுநர்கள் பணி மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.
அதே போன்று சென்னை மாநகராட்சி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரவசம் ஏற்படுவதற்காக யோகா பயிற்சிகள் கற்றுத் தரப்படுகிறது சென்னை மாநகராட்சி பூங்காக்கள் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நடைபயிற்சிக்காக மாநகராட்சி பூங்காக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் நலன் கருதி 26 மாநகராட்சி பூங்காக்களில் ரூபாய் 50 லட்சம் யோகா மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஒவ்வொரு பூங்காவிலும் யோகா பயிற்சி அளிப்பவருக்கு தலா ரூபாய் 1500 மாநகராட்சி சார்பில் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அந்த வகையில் 26 பூங்காக்களிலும் யோகா பயிற்சி அளிப்பதற்காக ஆண்டிற்கு ரூபாய் 4 லட்சத்து 68 ஆயிரம் செலவாகும்.
தினந்தோறும் காலையில் 6 மணி முதல் 8 மணி வரை யோகா பயிற்சிகள் கற்றுத் தரப்படும். யோகா பயிற்சிகள் மேற்கொள்வதினால் மன அழுத்தம், இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன உளைச்சல், சர்க்கரை நோய், மூட்டு வலி, தலைவலி, அலர்ஜி, தசைப்பிடிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு காணப்படுகிறது
பொது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி யோகா பயிற்சிகளை நன்கு கற்று சென்னை மாநகரத்தில் அதிகமான நபர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்கிற நிலையை உண்டாக்க வேண்டும் என்றார்.
Source:Nakkeeran
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.