Saturday, July 17, 2010

மனிதனும், இறைவனும்


       ஒருவழியில் பார்த்தால் மனிதன் இறைவனைவிட ஒரு படி மேலானவன் என்று கொள்ளலாம். அவனிடம் இறைத்தன்மை எல்லாம் இருக்கின்றன (God is omnipotent). இறைவன் எல்லா ஆற்றலும் நிறைவாகப் பெற்றவன். அத்தன்மை மனிதனிடம் இருக்கின்றது (God is omniscient). இறைவன் எல்லாம் அறிந்தவன். அத்தன்மையும் மனிதனிடம் இருக்கின்றது. (God is omnipresent). இறைவன் எங்கும் இருப்பவன். மனிதனும் அந்நிலையை எய்த முடியும். ஆராய்ச்சியின் மூலமும், யோகத்தின் மூலமும் உள்ளது உள்ளபடியே தன்னுணர்வாக, அகக்காட்சியாகப் பெற்று விட்டால் மனிதன் இறைத்தன்மையை முழுமையாகப் பெறுகிறான்.

         மனிதனிடம் கடவுள் எல்லாமே இருப்பதோடு கடவுளை அறிந்து கொள்ளும் பெருமையும் இருக்கிறது. இத்தகைய பெருமை அவனிடம் இருக்க அதனை மறந்து தன் உடல் அளவிலே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையிலேயிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அவன் தன் உயிரைப் பற்றிய அறிவு பெற வேண்டும். உயிரின் தன்மை என்ன? அதன் மூலம் என்ன? பரம்பொருளே, அதன் எழுச்சி நிலையே உயிராக இருக்கிறது. இன்று இந்த உடலில் உயிர் இருந்தாலும் பரம்பொருளின் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது.

           உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக் கொண்டு இருந்தாலும் தன் முழுமையை உணர்ந்து கொண்டால் - தன் மூலத்தையும், வியாபகத்தையும் அறிந்து கொண்டால் எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடுகின்றது. சிறுமை, பெருமை, தன்முனைப்பு எல்லாம் நீங்கி விடுகின்றன. இந்த நிலையில் பிறரை மதிக்கவும், ஆதரிக்கவும், பரிவு காட்டவும், மேல்நிலைக்குக் கொணரவுமான பொறுப்புணர்ச்சியைப் பெறுகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.