Thursday, July 1, 2010

அறிவு சார்ந்த சமுதாயம் உருவாவது எப்படி: ஆழியாறு விழாவில் கலாம்


        பொள்ளாச்சி: "அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டுமென்றால், ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்ச்சி பெற்ற மனிதனாக மாற வேண்டும்' என்று, ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். "யோகமும் மனித மாண்பும்' என்ற பட்டப்படிப்பு படித்த 1,009 பேருக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சான்றிதழ் வழங்கினார். அவர் பேசியதாவது: பட்டமளிப்பு விழாவில் "நல்லொழுக்கத்தின் மூலம் விழிப்புணர்ச்சி பெற்ற சமுதாயம்' என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன். வேதாத்திரி மகரிஷியின் "ஞானமும் வாழ்வும்' என்ற புத்தகத்தை படித்தேன்.


          அதில், "பரமாணுக்கள் கூடிய தொகுப்பு அணுவாக வெளிப்படுகிறது. அணுக்கள் பல இணைந்து பேரணு எனப்படுகிறது. பேரணுக்கள் பல இணையும் தொகுப்புகள் தான் பற்பல தோற்றங்களாகும். கோள்கள், பூமி, உயிர்கள் யாவும் அணுக்கள் கூடி இயங்கும் தொகுப்பு நிகழ்ச்சிகளே' என்று குறிப்பிட்டுள்ளார். அணுக்களைப் போன்று, ஓய்வின்றி நாமும், ஓயாது, துவளாது முயற்சி செய்தால், இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் ஐயமில்லை.

        மனதிலே நல்லொழுக்கம் இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும்; நடத்தையில் அழகு இருந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும்; குடும்பத்தில் சாந்தி இருந்தால் நாட்டில் சீர்முறை உயரும்; நாட்டில் சீர்முறை இருந்தால் உலகத்தில் அமைதி நிலைக்கும். நல்லொழுக்கம் என்பது முழு உலகத்திற்கும் பொதுவானது. உலகத்தில் அமைதி நிலவ மனதில் நல்லொழுக்கம் உதிக்க வேண்டும். மனதில் நல்லொழுக்கம் உதிக்க செய்ய மாதா, பிதா, குரு ஆகியோரால் மட்டுமே முடியும். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே முதல்குரு ஆவார்கள். ஆரம்ப கட்டத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் தான் முதுமை வரையிலும் துணை நிற்கும்.

           ஒரு விழிப்புணர்ச்சி பெற்ற சமுதாயம் உருவாவதற்கு நல்லொழுக்கம் முக்கியமானது. இதற்கு ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்ச்சி பெற்ற மனிதனாக மாற வேண்டும். இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உற்பத்தி துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், விவசாயம் 2 சதவீதம் தான் அடைய முடிந்துள்ளது. கிராமப்புறத்திலும், நகரத்திலும் சுமார் 22 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்த வேண்டும். இந்த இலக்கை அடையவே "இந்தியா 2020' தொலைநோக்கு திட்டத்தை தயார்படுத்தியுள்ளோம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

Source: Dinamalar





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.