Thursday, June 24, 2010

இயற்கையே காட்டும் தீர்வு!


         நதிநீர்இணைப்பு நிச்சயம் சாத்தியமான விஷயமே என்று சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன். அதற்கு வாசகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைக் கண்டு மலைத்துப் போனேன். அந்தத் திட்டம் நிச்சயம் பெரும் வெற்றி பெறும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்லி எத்தனையோ ஈ-மெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் என்னை வந்தடைந்தபடி இருக்கின்றன. அதில் பெரும்பாலானவர்கள் தங்களை இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டது என்னை உவகை கொள்ளச் செய்தது. நதிநீர் இணைப்பு என்கிற கருத்து ஒரு புயல் போல் மக்களிடையே வலுப்பெற்று வருவதைக் காண முடிகிறது.

           இன்று பெரும் சாதனைகளாக விளங்கிக் கொண்டிருக்கும் எத்த னையோ விஷயங்கள் ஒரு காலத் தில் சாத்தியப்படுமா என்கிற சந்தேகத்துடன் வெறும் கருத்துருவாக்கமாகவே இருந் தவைதான். நிலவைச் சென்ற டைவதும், பெரும் பெரும் அணைகள் கட்டுவதும், விண் ணுயர்ந்த கட்டிடங்களை அமைப்பதும், மலைச்சிக ரங்களில் பாதைகள் அமைப் பதும். கடல்களில் செயற்கைத் தீவுகள் உண் டாக்குவதும் மனிதனின் கனவாகவே இருந்து... பின்பு நனவானவைதான். முதலில் கருத்து உருவாகிறது. பின்னாளில் அது உருப்பெருகிறது.

         அந்தக் கருத்துகளைச் செயல்பட வைத்தது மனிதனின் துணிச்சலும், செயலாற்றும் திறனும்தான். அது போல் எதிர்காலத்தில் இந்தியாவில் நதிநீர் இணைப்பு என்கிற கருத்து ஒரு பெரும் இயக்கமாகவே மாறி, அதனை நனவாக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் ஒன்றும் இல்லை. இந்தக் கருத்து மேன் மேலும் வலுப்பெற நாம் பல விஷயங்களைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். இப்போது அதைப் பற்றிய நான்கு அடிப்படை விஷயங் களைச் சொல்ல விரும்புகிறேன்.

         நமது நாட்டின் அடிப்படை தண்ணீர்த் தேவைகள், குடிநீர், விவசா யம், சுகாதாரம், தொழிற்சாலை என்கிற நான்கு பெரும் பிரிவு களின் கீழ் வரு கின்றன. இந்த பிருமாண்டமான தண்ணீர்த் தேவைக்கான தண்ணீர் வரவு மழை, பனிமலைப் பொழிவு போன்றவற்றிலிருந்து எவ்வளவு கிடைக்கிறது? அது போதுமான அளவுக்கு இருக் கிறதா?

         ஒவ்வொரு வருடமும் நம்முடைய மக்கள் தொகை யில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறட்சியினாலோ அல்லது வெள்ளங்களினாலோ பாதிக் கப்படுகிறார்கள். அதன் நஷ்டக் கணக்கு என்ன?. நம் நாட்டில் தனிப் பட்ட மனிதனின் தண்ணீர் தேவை என்பது (ல்ங்ழ்ஸ்ரீஹல்ண்ற்ஹ) 10 கிலோ லிட்டராகவோ 50 கிலோ லிட்டராகவோ இடத்துக்குத் தகுந்தாற்போல் வேறுபடுகிறது. அது முழு வதுமாகக் கிடைக்கப் பெறுவது இல்லை.

         நாளுக்கு நாள் கடுமை யாக உயர்ந்துவரும் மக்கள் தொகையின் எதிர்காலத் தண்ணீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான திட்டங்கள் நம்மிடம் என்ன இருக்கிறது? 2020-ம் வருடம் நம்முடைய உணவுத்தேவை யின் உற்பத்தி 400 மில்லியன் டன்களை எட்டும். அதற்கான தண்ணீர் எங்கேயிருந்து வரப் போகிறது? வானத்திலிருந்து கொட்டி விடுமா? அப்படியே கொட்டினாலும் அதை வீணாக்காமல் தகுந்தபடி சேமிக்கும் வழிவகைகள் நம்மிடம் இருக்கிறதா?

         அடுத்ததாக “தண்ணீர் சமநிலை’’ அதாவது “வாட்டர் பாலன்ஸ்’’ என்கிற விஷயத் துக்காக வருகிறேன். இந்தியா ஒவ்வொரு வருடமும் தோராய மாக 4000 பில்லியன் கியூபிக் மீட்டர் (பிசிஎம்) தண்ணீரை இயற்கையின் கொடை மூலமாகப் பெற்று வருகிறது. அதில் 700 பிசிஎம் ஆவி யாதலின் மூலமும் இன்னொரு 700 பிசிஎம் தண்ணீர் மண்ணில் பாயும் போதும் மறைந்து விடுகிறது. இதைவிட முக்கியமான உண்மை, சுமார் 1500 பிசிஎம் தண்ணீர் வெள் ளங்களின் காரணத்தால் உபயோகிக்கப்படாமல் கடலில் பாய்ந்து கலக்கிறது.

        ஆக, கடைசியில் சேமிக்கக் கிடைப்பது வெறும் 1,100 பிசிஎம்தான் இதிலும் நிலத்தடி உறிஞ்சுக் கொள்வது 430 பி.சி.எம். மொத்தத்தில், கிடைக்கும் 4000 பிசிஎம் தண்ணீரில் நாம் உபயோகப் படுத்துவது 670 பி.சி.எம்.தான். வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி நமது நாட்டைத் தாக்குவதைப் பற்றி நான் பல வருடங்களாக அவதானித்து வருகிறேன்.எட்டு பெரிய நதிப் பள்ளத்தாக்குகளில் உள்ள40 மில்லியன் ஹெக்டேர் பரப்பை ஆண்டு தோறும் கடும் வெள்ளம் பாதித்து வருகிறது. அங்கே வாழக்கூடிய 260 மில்லியன் மக்களை அந்த வெள்ளம் புரட்டிப் போடுகிறது.

          இதற்கு நேர் எதிராக கடும் வறட்சி 14 மாநிலங்களில் உள்ள சுமார் 116 மாவட்டங்களில் வசிக்கும் 86 மில்லியன் மக்களை தாக்குகிறது. இப்படி வெள்ளம் ஒரு புறமும், வறட்சி ஒரு புறமும் மக்களைத் தாக்கி, உயிர்பலி ஏற்படுத்தி, உற்பத்தியை நாசம் செய்து, நோய்களைப் பரப்பி சர்வ நாசம் செய்வதை நாம் எவ்வளவு நாட்களுக்கு சகித்துக் கொண்டிருப்பது? இதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டாமா?

         வெள்ள மெனப் பாய்ந்து கடலில் கலந்து வீணாகும் தண்ணீரின் அளவு, ஒவ்வொரு பருவ காலத்திலும் 1500 பிசிஎம். வெள்ளத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் இந்த வெள்ள நீரை, கடும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்குத் திருப்பி விட்டால் இரண்டு பக்கமும் நஷ்டமும் அழிவும் தடுக்கப்படும் அல்லவா? இயற்கையே நம் கண் முன்னே வைத்திருக்கும் தீர்வு அல்லவா இது?

         திருப்பி விடுவது மட்டுமின்றி இந்த உபரித் தண்ணீரை உரிய முறைகளில் சேமித்து வைத்தால், பருவகாலங்கள் தவறும் நேரத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே? வெள்ளத் தினால் மட்டும் நம் நாட்டில் ஏற்படும் நஷ்டம் ஆண்டுக்கு 2400 கோடி ரூபாய்கள். வெள்ள பாதிப்புக்காக அரசு கொடுக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை மட்டும் 1200 கோடி ரூபாய். வெள் ளத்தின் மூலம் எத்தனை வீடுகள் மூழ்குகின்றன? எத்தனை உள்ளூர் மக்கள் அகதிகள் ஆகிறார் கள்? எவ்வ ளவு பயிர் கள் நாசமடைகின்றன? ஒவ்வொரு வருடமும் நான் தொலைக்காட்சிகளி லும் பத்திரிகைகளிலும் காணும் காட்சிகள்தானே அவை?

          வாய்க்கால் வரப்புகளும், கால்வாய் களும், அணைகளும், ஏரிகளும் காலம் காலமாய் மனிதனின் தண்ணீர் தேவைகளை, வீணாகப் போகும் ஆற்று நீரைத் திருப்பி விடுவதற்காகவே அமைக்கப்பட்டன. அவை யெல்லாம் சாத்தியம் என்கிற போது, நதிகளை இணைத்து, பொங்கிவரும் ஒரு ஆற்றின் தண்ணீரை, வானம் பார்த்த பூமியாய் ஆகிவிட்ட இன் னொரு நதியில் திருப்பி விடு வது எந்த விதத்தில் தவறு?

         அதை மட்டும் செய்து விட்டால், மனித குலத்தின் பெரிய பெரிய வாழ்வாதார பிரச்னைகள் தீர்ந்து விடுமே?.யோசிக்க வேண்டியவர்கள், யோசிக் கட்டும்!

- டாக்டர் அப்துல் கலாம்
Source: nakkheeran

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.