பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
ஒன்றே குலம் ஒருவனே தேவன்,
ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொலல் பாவம்!- இவைகள் எல்லாம் தமிழ் சமுதாயம், உலக சமூகத்திற்கு கொடுத்த கொடைகள். இதில், கணியன் பூங்குன்றன், பாரதியாரின், "ஜாதிகளே இல்லை' என்ற கருத்தில் இருந்து, திருவள்ளுவர் சிறிது வேறுபட்டு, "பிறப்பினால் அனைவரும் ஒன்றே! அவரவர்கள் செய்யும் தொழில் தான், அவர்களின் சிறப்பை வேறுபடுத்திக் காட்டுகிறது' என்கிறார்.
"பாரத பண்பாட்டில், ஆரம்பத்தில் ஜாதிகளுக்கு இடமில்லை. அதன் பின் ஏற்பட்ட கால மாற்றத்தால், தொழில்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் அமைந்தன. அதில் பல உட்பிரிவுகள் ஏற்பட்டு, அது படிப்படியாக பரந்து விரிந்து, இன்று எண்ணில் அடங்கா ஜாதிகள் தோன்றியுள்ளன' என அறிஞர்கள் கூறுகின்றனர்.சமூக அமைப்பால் பிளவுபட்ட நம் சமுதாயத்தை சீர்திருத்த, புரட்சியாளர்களும், சிந்தனாவாதிகளும், மகான்களும் தோன்றினர். அதன் விளைவு, "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் சம நீதி' என்ற சமூக நீதி கருத்துக்கள் விளைந்தன. இந்த மாற்றம், சமுதாயத்தால் படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.இன்று காலனியில் உள்ளவர்களும், அக்ரஹாரத்தில் உள்ளவர்களும், ஒரே பள்ளியில், அருகருகே அமர்ந்து ஒன்றாக படிக்கின்றனர். ஒரே வாகனத்தில் ஒன்றாக பயணிக்கின்றனர்.
ஒன்றாக உணவருந்துகின்றனர். நகரங்களில் ஒரே வீதியில், ஒரே குடியிருப்பில் ஒன்றாக குடியிருக்கின்றனர்.காலில் செருப்பு அணிவதற்கு கூட தடை விதிக்கப்பட்டவர்கள், அரசு பதவியில், ஜனாதிபதி வரையிலான அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்து, அனைவரது வணக்கங்களையும், மரியாதைகளையும் பெற முடிகிறது.கல்வி, வேலை, சமூக அந்தஸ்து, பதவி என அனைத்தையும் இன்று, ஆதிதிராவிடர்களும் பெற முடிகிறது. இத்தகைய வரவேற்கத்தக்க மாற்றங்களுக்கு, சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், அன்னிய கலாசார, பண்பாடுகளும், தன்னலமற்ற அரசியல் தலைவர்களின் சேவையும் பெருமளவு உதவியிருக்கிறது. அத்துடன், சமய சார்பற்ற நாடாக இருந்தாலும், சமூகத்தில் இன்றளவும் உள்ள ஏற்ற தாழ்வுகளை களைவதற்காக, இட ஒதுக்கீட்டு முறையை, கடந்த 60 ஆண்டுகளாக அரசு அமல்படுத்தி வருகிறது. இருப்பினும், அடக்கி வைக்கப்பட்டிருந்த சமுதாயம், இன்னும் முழுமையான விடுதலை பெறவில்லை.
அந்தச் சமுதாயம் முழுமையான விடுதலை பெறுவதற்கான அரசின் உதவிகளை, இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டிய நிலை உள்ளது. "இந்த நிலை மாற, ஜாதி அடையாளம் அவசியம். அதனால், கல்வி, வேலை, பிற சலுகைகள் என அனைத்திற்கும், அதற்கான விண்ணப்பங்களில் ஜாதியை குறிப்பிட வேண்டும்' என அரசு கூறி வருகிறது.இப்படி எந்த சமுதாய பாகுபாட்டை உடைக்க வேண்டும் என்பதற்காக அரசு முன்னின்று முயன்று வருகிறதோ, அந்த சமுதாய பாகுபாட்டையே மீண்டும் புகுத்தும் வண்ணம், இன்றைய அரசியல் நடைமுறைகள் இருந்து வருகின்றன.சமூக மாற்றத்தை கண்டு கொள்ளாமல், ஓட்டு வங்கி அரசியலை மட்டும் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்காமல், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய, மாநில அரசுகள், சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.
இதன் மூலம், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இட ஒதுக்கீட்டின் நன்மைகள் கிடைக்க, அவர்களது சமூக சூழ்நிலையோ, பொருளாதார நிலையோ கணக்கில் கொள்ளப்படவில்லை. பொருளாதார அளவு கோல் என்ற, "கிரீமிலேயரை' கேட்டாலே, பேசக் கூடாத ஒன்றை சொன்னது போல் அலறுகின்றனர்.மறு பக்கம், பள்ளிகளில் கூட பாகுபாடை புகுத்தும் வகையில், ஒவ்வொரு ஊரிலும், ஆதிதிராவிடர்கள் குடியிருக்கும் பகுதியில் தனி பள்ளிகள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு என தனித்தனி ஹாஸ்டல்களை அரசே அமைத்து வருகிறது.அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கவும், ஒரே ஹாஸ்டல்களில் தங்கவும் தடை விதித்தவர்கள் யார், அப்படி தடை விதித்தவர்கள் மேல் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகிறது."மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இதற்கு, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என, பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. சமூக நீதி பரவலாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த கோரிக்கையை வைப்பதாகவும், அவைகள் காரணம் தெரிவிக்கின்றன.
ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால், இருக்கிற ஜாதிகளுக்குள்ளே உட்பிரிவுகள் அதிகமாகி சண்டைக்கும், சச்சரவுக்கும் மேலும் வழி வகுக்குமே அன்றி, உண்மையான சமூக நீதி கிடைக்காது. "மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துகிறேன்' என்று சொல்லி வி.பி.சிங் கொளுத்திப்போட்ட வெடியால், வட மாநிலங்கள் பலவற்றில் ஜாதி மோதல் தீ பற்றி எரிந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், மீண்டும் அதே போல் பெரிய அளவு வன்முறை நாடு முழுவதும் வெடிக்கும் என்பது உறுதி. எல்லாரையும் மனிதராக பார்க்காமல், எந்த ஜாதி பெரிய ஜாதி என பார்க்க ஒரு கணக்கெடுப்பு அவசியமா? உண்மையான சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால், கிராமங்களில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைய வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களை கை தூக்கி விட வேண்டும். செய்ய மாட்டார்களே இந்த அரசியல்வாதிகள்!
- வி.கோபால கிருஷ்ணன் -பத்திரிகையாளர்
Source: Dinamalar
Source: Dinamalar
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.