பத்து வயது வரையில் எனக்கு வறுமை என்ற சொல்லுக்குச் சரியான பொருள் தெரியாது. உலகமே மகிழ்ச்சி பொங்கும் அரங்கமாக இருந்தது. முன் கட்டுரையில் எழுதப்பெற்ற ஒரு நிகழ்ச்சியினை நான் என் வாழ்வில் சந்தித்தபோது எனது மனதிலே ஒரு மாற்றம். இன்பத்தோடு துன்பம் கலந்து இருப்பதாக உலக வாழ்வை உணர்ந்தேன். வறுமையைப் போக்க ஊக்கத்தோடு உழைத்தேன். காலை 6 மணிக்குத் தறிக்குழியில் இறங்கினால், இரவு 9 மணி வரையில் தொடர்ந்து நெசவு நெய்வேன். மத்தியில் தறியில் இருந்தபடியே காலை உணவு கொள்வேன். கேழ்வரகுக் கூழ், அதை இரண்டு நிமிடங்களில் குடித்து விடுவேன். பகல் உணவு கொள்வதற்காகத் தறியை விட்டு எழுந்து வருவேன். இருபது நிமிடங்களில் சாப்பாடு ஓய்வு எல்லாம் முடிந்துவிடும். மீண்டும் நெசவு. என் அருமை அன்னையும், தந்தையும் என்னைக் கெஞ்சிச் சொல்வார்கள். "கண்ணா! அதிகமாக நெசவு நெய்யாதேடா, உடல் இளைத்துவிடும்; உன்னைப் பெற்ற அருமை, எங்களுக்குத் தானே தெரியும்" என்பார்கள். அவர்களுக்கு உருக்கமாகவும் பணிவாகவும் பதில் சொல்வேன். தறி நெய்வதில் எனக்கு மிகவும் ஆசை இருந்ததை எடுத்துக் காட்டி "அந்த ஆசை நம் குடும்பத்துக்கு நன்மைதானே அம்மா தருகிறது" என்பேன். நான் இத்தகைய பதில் சொல்லும்போது, என் அன்னை, பலதடவை ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். தறியில் இருந்தபடியே எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.
எனது முதல் ஆசான்
இந்த வயதில்தான் எனக்கு ஒரு குரு கிடைத்தார். எனது வயதுக்கு ஏற்ப அவர் பக்தி மார்க்கத்திலேயே எனது நினைவை ஆழ்த்தி வைத்தார். சில சமயம் சுத்த அத்வைத தத்துவம் பேசினாலும், எனக்கு அது புரியவில்லை. அவருக்கு அப்போது வயது எழுபத்தைந்து. அவர் பெயர் ஏ. பாலகிருஷ்ணன். அவருடைய நற்போதனைகள் என் சிந்தையைத் தூண்டிவிட்டன. அவர் சொற்படி ஒழுக்கத்தோடும், அடக்கத்தோடும் நடந்து வந்தேன். பஜனை செய்வதில் மிகவும் ஆர்வம் பெற்றேன். எனினும் அவர் விளக்கும் கருத்துக்களின் அடிப்படை உண்மை அறிய, எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். எனக்குப் பன்னிரெண்டு வயதிற்குள் எனது உள்ளம் சில குறிப்பிடத்தக்க வினாக்களை எப்போதும் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கியது. அவை
1. இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை? இவற்றின் மூலமும் முடிவும் என்ன?
2. நான் யார்? உயிர் என்பது என்ன? உயிர் உடலில் எவ்வாறு இயங்குகின்றது? நோயும் முதுமையும் ஏன் உண்டாகின்றன? எப்படி உண்டாகின்றன?
3. கடவுள் யார்? பிரபஞ்சத்தை ஏன் அவர் படைத்தார்?
4. ஏழ்மை ஏன்? எப்படி உண்டாயிற்று? அதைப் போக்குவது எப்படி?
இவ்வினாக்கள் தான் என் சிந்தனையை ஆட்கொண்டன. அப்போது கிடைத்த குரு, எனக்குப் பஜனைப் பாடல்கள், சதகங்கள் இவற்றைத்தான் போதித்தார். ஆயினும் எனது வினாக்களில் ஒன்றுக்குக்கூட அவரால் விடை கூற முடியவில்லை. எனினும் எனக்கு இவ்வினாக்களை ஒட்டிய விளக்கங்கள் சில கிடைத்தன. அவை:
1. கடவுளை வழிபட்டு நமது குறைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கடவுளே காட்சியாகி, நமக்கு அவர் நிலையை விளக்குவார்.
2. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்ய வேண்டும். அதன் மூலம் வறுமை போகும். தறி நெசவின் மூலம் வறுமை மிகுமே அன்றி, அது போகாது.
3. ஒரு ஞானகுருவை அடையவேண்டும். அவர் மூலம் உயிரைப் பற்றிய விளக்கம், அறிவைப் பற்றிய விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும். இவையே என் உள்ளொளி காட்டிய விளக்கம்.
இந்த முடிவின்படி செயல்புரியத் தொடங்கினேன். வயது பதினான்கு ஆகிவிட்டது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.