* தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும். இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சாக அன்றி, ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது.
* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிவது கூடாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் உவந்து முன்வர வேண்டும்.
* சோறு சாப்பிடுவதிலே மட்டும் மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப்போகும். ஆற்றிலே கரைத்த புளிபோல அது பயன் தராது.
ஒவ்வோர் உயிரும், தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டி, அந்த அன்பின் பயனாக அருளிரக்கம் கொண்டு, ஏனைய உயிர்களின் நன்மைக்காக உள்ளம் கசிந்து, உயிர்களின் துன்பத்தைக் கண்டபோது உள்ளம் குழையும் இயல்பே அருள் இயல்பு ஆகும்.
* வஞ்சகத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து, அருள் நெறியில் ஒன்றாக இன்பமாக வாழ்வதை விரும்பி, உலகம் முழுவதும் ஒன்றாகிக் களிப்படைந்து வாழும் நிலை என்றுதான் வருமோ?
* நாள்தோறும் ஆண்டவனை வணங்கி வாழ்தல் வேண்டும். இல்லையேல், உலகத்தில், உயிர்களிடத்தில், அன்பும், அருளிரக்கமும் ஒரு சிறிதேனும் ஏற்படாது.
* அன்பையும், இரக்கத்தையும், அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம்வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.
* ஆண்டவன் எல்லா உயிர்களையும் ஒரே நோக்கமாக சம பாவனையாகப் பார்க்கும் இயல்புடையவர். ஆதலால் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அருள்பெற வேண்டுமானால் அவர்களுக்குச் சமத்துவ சிந்தை பரந்த நோக்கம் இன்றியமையாதவை.
-வள்ளலார்
Source: Dinamalar
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.