ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் ஒரு சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களாலான பருப்பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது.
இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை.
வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.