மனித இனம் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் இருக்கிறது. மனிதனுக்குத் தேவையான நீரை வழங்குவதற்குக் கடல் ஒன்று தான் உள்ளது. எல்லோரும் மூச்சு விடுவதற்குரிய காற்றும் ஒன்று தான் உண்டு. உயிர்கட்கு எல்லா வகையிலும் ஆதாரமாக இருக்கக்கூடிய சூரியனும் ஒன்று தான். இந்த நான்கில் ஒன்றையுமே மனிதன் செய்தது இல்லை. மேலும், உலக விரிவான மனித சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் அறிவின் திறமையாலும், உடல் உறுப்புகளின் செயல் திறமையினாலும் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களின் மூலம் மனிதகுலம் மொத்தமும் வாழ்ந்து வருகிறது. இவ்வாறே ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கையும் அமைந்து உள்ளது.
மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.