Friday, March 19, 2010

தவறைத் திருத்துவது எப்படி?


* உடல், உயிர், அறிவு... இம்மூன்றும் உங்களுக்கு சொந்தம் கிடையாது. நீங்கள் உண்பதால் வளரும் உடலும், உயிரும், அனுபவ தேடலால் கிடைக்கும் அறிவும்கூட, இறைவனால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது. மற்றபடி உங்களுக்கும், அதற்கும் சிறு சம்பந்தம் கூட கிடையாது. ஆகவே, நீங்கள் பெற்றிருக்கும் உடல்பலம் மற்றும் புகழ், பெயருக்காக கர்வம் கொள்ளாதீர்கள். உங்களால் உண்டாவது எதுவும் இல்லை என்ற உண்மையை புரிந்துகொண்டு கர்வத்தை விட்டுவிடுங்கள்.

* நீங்கள் ஒரு உயர்ந்த கட்டடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அங்கிருந்து கீழே இறங்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அதற்காக உடனேயே, மேலிருந்து குதித்துவிட முடியாது. படிகளின் வழியாக இறங்கி வருவதுதான் சரியான வழியாக இருக்கும். இதைப்போலவே தவறு செய்துவிட்டு, திருந்த வேண்டுமென நினைப்பவர்கள் உடனேயே, உணர்ச்சி வசப்பட்டு "திருந்திவிட்டேன்' என்று சொன்னால் மட்டும் போதாது. அவ்வாறு சொல்பவர்களை, முழுமையாக திருந்திவிட்டதாக ஏற்கவும் முடியாது. மனதை படிப்படியாக அமைதிப்படுத்தி, இறைவனின் மீது செலுத்த முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் மனம் திருந்தும். தவறுகள் ஏற்படாது.

* நீங்கள் இறைவனிடம் பக்தி செலுத்தி, நன்னிலை பெறுவதற்காகவே இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் தான் மேன்மையான நிலையை அடைய முடியும். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உடல் வாகனம் போன்றது. அந்த வாகனத்தை பழுதுபடுத்திவிடாமல், செம்மையாக பராமரித்து, மனதையும், உடலையும் இறைவனிடம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களது கடமையை முழுமையாக நிறைவேற்றியவர் ஆவீர்கள்.

-வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.