இறைநிலையின் பரிணாம சரித்திரத்தில் உலகம் என்ற அழகிய வளம் பலவும் பொருந்திய நந்தவனத்தில் இறுதியாகப் பூத்த மலர்கள் தாம் மதிப்பு மிக்க மனித குலம் என்ற சீவ இனம்.
மேன்மையான ஆறாவது அறிவின் சிறப்பைக் கொண்டு மனத் தூய்மையும், வினைத் தூய்மையும் பெற்று இறையுணர்வு அடைந்து பிறவிக் கடல் கடந்து உய்ய வேண்டும் என்ற இடைவிடாத முயற்சியில் பலப்பல சிரமங்களை ஏற்று வாழ்ந்து கொண்டிருப்பதே மனித இனம்.
பரிணாமம் என்ற இயற்கையின் நெடும் பாதையில் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுத் தொடர்ந்து வரும் புலன் மயக்கச் செயல்களின் பதிவுகள் பலப்பல. இவையனைத்தும் அறிவினுடைய முழுமை நோக்கிச் செல்லும் மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடுத்தும் தாமதப்படுத்தியும் வருகின்றன. இதன் விளைவாக மனித குலத்தில் உடல் நலம், மன வளம், நட்பு நலம், செல்வப் பெருக்கம் இவை சீர்குலைந்து உலகெங்கிலும் வாழும் மக்களில் பெரும்பாலோர் சோர்வும், துன்பமும், வாழ்க்கைச் சிக்கலும், கவலையும் அடைந்து துன்பமடைகிறார்கள்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.