பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப் பார்ப்பதை விடுத்து, குறைவில்லாது நிறைவையே பார்க்கப் பயிற்சி கொடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் அமைந்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நலன்கள். இதையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே! ஏதேனும் ஒரு குறைபாட்டை நாமாகக் கற்பித்துக் கொண்டு அது இல்லையே என்று துன்பப்படுவதை விட்டுவிட வேண்டும்.
இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் இந்தக் குறைபாடு களைந்து நிறைவை ஏற்படுத்திக் கொண்டு மனநிறைவாக வாழ்வதற்கு இறை உணர்வும், உயிர் உணர்வும் வேண்டும், அந்த உயிர் உணர்வைப் பெறுவதற்கு, இறை உணர்வைப் பெறுவதற்கு தவம் இருக்கிறது.
அற உணர்வைப் பெறுவதற்கு நல்ல செயல்கள் செய்யச் செய்ய தானாகவே அது மலர்ந்து விடும். அந்த முறையில் எப்பொழுதும் யாருக்கு என்ன நன்மை செய்யலாம் என்று அதைச் செய்யத் தயாராகும் முறையில் நீங்கள் வந்து விட்டீர்களானால், அதுவே தான் எல்லாம் வல்ல இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொண்டு.
நேரடியாக நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்றால் இறைவன் ஒவ்வொரு உள்ளத்திலும் இருந்து கொண்டு எங்கு தேவையோ அதை அங்கு போய் உதவி செய்து முடிக்கிற அளவுக்கு உதவி செய்ய வேண்டும். வாழ்க்கையில் மனநிறைவும், மகிழ்ச்சியும் பெறுவதற்கு இதற்கு ஈடான மார்க்கம் பிறிதொன்றும் இல்லை.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.